தீபாவளி - சிறுகதை
மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. கும்மிருட்டு. மென்மையாக வானம் தூரலிட்டுக் கொண்டிருந்தது. நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், தெருக்கோடியில் மங்கலாய் எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கின் ஒளியில் அப்பாவின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன்.
“டேய் உள்ள வாடா..மழ வருது.. கரண்ட் போறதுக்குள்ள சாப்புடு வா” உள்ளேயிருந்து அம்மா அழைத்தாள்.
“பசிக்கலமா,,அப்பா வரட்டும்” உரக்கக் கத்திவிட்டு மீண்டும் வழி மீது விழியை வைத்தேன்.
“என்னடா என்னைக்கும் இல்லாத அதிசயமா அப்பா வரட்டுங்குற..”என்று அம்மா முனகியது காதில் விழுந்தது.
ஒன்பது ஐந்துக்கு வரும் மினி பஸ்ஸில் தான் அப்பா வருவார். பக்கத்து டவுனில் ஒரு மில்லில் வாட்ச்மேன் வேலை. நாளைக்கு தீபாவளி என்பதால் இன்னைக்கு ராத்திரி ஷிப்ட் இல்லை.
வாயில்படிக்கும் நடைக்கதவுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்த போது, அன்றைக்கு மதியம் நடந்தது மீண்டும் நினைவுக்கு வந்தது.
“ஜீன்ஸ்பேன்ட் ஒன்னு, சாதா பேன்ட் ஒன்னு.அப்புறம் இந்த சட்டை. மொத்தம் ஆயிரம் ரூவாய்க்கு மேல டா” என்று சொல்லியவாறே அவற்றை, “நியூ இந்தியா சில்க்ஸ்” என்று எழுதியிருந்த துணிக்கடைக் கவரிலிருந்து வெளியே எடுத்து என் மடியில் வைத்தான் சங்கரன். வாய் கொள்ளாத சிரிப்பு. கண்ணில் மிளிரியது அவ்வளவு பெருமிதம். நானும் அவனும் எங்கள் ஊர் அரசுப்பள்ளியில் மூன்றாவது படிக்கிறோம்.
புதுத்துணியின் மனம் நன்றாக இருந்தது. முகர்ந்து கொண்டேன். ஜீன்ஸ் பேன்டைத் தடவிப் பார்த்த போது உணர்ந்த அந்த பொருபொருப்பு புதுமையாக இருந்தது. ஜீன்ஸ் பேன்ட்டெல்லாம் எனக்கு வாங்கியதுமில்லை, போட்டதுமில்லை. நல்ல நாள், பண்டிகை என்று ஏதாவது வந்தால் ஒரு செட் சட்டை,ட்ரவுஸர் தைத்துக் தருவார்கள். ஆனால் இதுவும் கூட அந்த சமயத்தில் அப்பாவிடம் காசு பணம் புழங்கினால் தான். இல்லையென்றால் அதற்கு முன்னால் கடைசியாக வாங்கிய துணியைத்தான் அன்றைக்கும் போட்டுக் கொள்வது.
கட்டிலுக்கடியிலிருந்து ஒரு அட்டைப்பெட்டியை எடுத்தான் சங்கரன். வெளியே நீட்டிக் கொண்டிருந்த நான்கு ராக்கெட் வெடிகளைப் பார்த்த்தும் புரிந்தது, அது பட்டாசுப் பெட்டியென்று.
அடேயப்பா. பெட்டி நிறைய பட்டாசுகள். வண்ண வண்ணமாய், வித விதமாய், சின்னச் சின்னப் பெட்டிகளில் மத்தாப்புகளும், வெடிகளும். அதில் பலவற்றை நான் பார்த்ததேயில்லை.
“பாத்தியாடா துப்பாக்கி” பெட்டிக்குள்ளிருந்து ஓரு கருப்பு ப்ளாஸ்டிக் துப்பாக்கியை எடுத்து என் முகத்துக்கு முன்னாள் ஆட்டினான்.
“சூப்பர்டா” என்றேன். இனி இந்தத் துப்பாக்கி உடையும் வரை திருடன் போலீஸ் விளையாட்டுக்கு மட்டுமே வருவான் சங்கரன். அதிலும் அவனே தான் போலீஸ். நான் ஒட அவன் துரத்தி துரத்தி சுடுவான். அவ்வப்போது எனக்கும் அதை சுடத் தருவான் என்பதால் நானும் அவன் சுடும் போது “ஆ” எனக் கத்திக் கொண்டே பறந்து பறந்து விழுவேன்.
“நீ புதுத்துணி எடுத்துட்டியாடா?” சங்கரன் கேட்கவும் எனக்கு பகீரென்றது.
அந்தக் கேள்விக்கான பதிலுக்குத்தானே நானும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடம் மில்லில் யாருக்குமே போனஸ் இல்லையென்று நிர்வாகம் சொல்லிவிட்டதாக அம்மாவிடம் அப்பா புலம்பிக்கொண்டிருந்தது நினைவிருந்தது. புதுத்துணி எடுப்பதாக இருந்தால் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னதாக எடுத்துத் தைக்கக் கொடுத்திருக்கவேண்டும். அது நடக்கவில்லை என்ற போதே ஏறக்குறைய முடிவு செய்துவிட்டேன். இருந்தாலும் கடைசி நேரத்தில் அப்பா ரெடிமேட் துணி எடுத்து வருவாரென்று ஒரு துளி நம்பிக்கையும் ஏக்கமும் மனதின் எங்கோ ஒரு மூலையில் குடிகொண்டிருந்தன.
“உன்னத் தான்டா.. டிரெஸ்,பட்டாசெல்லாம் வாங்கிட்டியா?” என்று என் தோளை உலுக்கினான்.
“ஆ..ம்ம்..இன்னைக்கு நைட்டு அப்பா வீட்டுக்கு வரும் போது வாங்கிட்டு வருவாருடா.ஒரு மாசமா அப்பாவுக்கு நேரமே இல்ல. இன்னிக்கு தான் வாங்குவோம்” என்றேன்.
“நாளைக்கு தீபாவளிடா.. இன்னிக்கு நைட்டு எல்லாம் தீர்ந்துருமே”
“இல்லடா..டவுன்ல எங்கப்பாவுக்கு நெறைய கடை தெரியும். காலைலயே எங்களுக்கு எடுத்து வச்சிருக்க சொல்லிருப்பாரு எங்கப்பா” என்று ஒரு பொய்யைச் சொல்லி முடிக்கும் போதே துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணீர் முட்டிக் கொண்டது. எப்படியோ சமாளித்து வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.
இப்போது, ‘பாம் பாம்’ என்ற மினி பஸ்ஸின் ஹார்ன் ஒலி கேட்டதும், நினைவுகள் கலைந்தன. தெருவுக்கு ஓடினேன்.
பஸ்ஸிலிருந்து சிலர் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் அப்பாவை கண்கள் தேடின. சில நிமிடங்களில் அந்த சிறு கூட்டம் தெருமுனையை அடைந்த போது, தெருவிளக்கு வெளிச்சத்தில் அப்பாவைக் காண முடிந்தது. அவர் கையில் ஒரு வெள்ளை நிறத் துணிக்கடைப் பை.
மனதில் ஒரு லட்சம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. இருண்ட அந்தத் தெருவின் மத்தியில் நின்றிருந்த நான் துள்ளிக் குதித்தேன்.
“அம்மா..அப்பா வந்தாச்சு” என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடிப் போய் கட்டிலில் விழுந்தேன்.
“அய்யோ..ஏண்டா இப்புடி கத்துற. அவரு தினமும் தான வர்றாரு” என்று எரிச்சல் பட்டுக் கொண்டாள் அம்மா.
கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டு கண்களைப் பொத்திக்கொண்டேன். அப்பா வந்து அழைத்த பின்னால் அந்தப் பையை வாங்கிப் பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.
சில நொடிகள் கடந்தன. ஆனால் என்னால் இருப்புக் கொள்ள முடியவில்லை.
எழுந்து மீண்டும் தெருவுக்கு ஓடினேன். அப்பா கிட்டத்தட்ட வீட்டை அடைந்து விட்டார்.
என்னைப் பார்த்ததும்,”ஏன்டா..இந்நேரத்துல வெளில என்ன வேல?..உள்ள போ” என்றார் வழக்கமான கரடு முரடான குரலில்.
அவர் அப்படித்தான். சிடுமூஞ்சி. அவர் ஒருநாளும் யாரோடும் சிரித்துப் பேசி நான் பார்த்ததில்லை. ஆனாலும் அம்மாவை விட அவரைத் தான் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் என்னை அவர் எப்போதும் எதற்கும் அடித்ததில்லை. ஆனால் அம்மா என்றால் அடி தான். இந்த வாட்டும் வறுமையில் அப்பா சிரிப்பை மறந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தன. என்னிடமும் அன்போ பாசமோ தப்பித் தவறியும் அவர் பேச்சிலும் செயலிலும் காட்டியதில்லை..சரி இப்போது எனக்கு தேவை பாசம் இல்லை. பட்டாசு மட்டுமே.
நான் முன்னே செல்ல, அப்பா பின் தொடர்ந்தார். நான் வாசலில் நிற்க, அவர் நடைக்கதவை இழுத்து சாத்தினார். அப்போது அவர் வைத்தைருந்த பாலிதீன் பையைப் பார்த்தேன்.
பட்டாசு இருப்பதற்கான அறிகுறி ஏதுமில்லை. அது பரவாயில்லை. காலையில் கூட பக்கத்து மளிகைக் கடையில் கூட வாங்கிக்கொள்ளலாம். துணி இருந்தால் போதும் கடவுளே என வேண்டிக்கொண்டேன்.
“வரும்போது மழையாப்பா?”
“இல்ல” என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லிவிட்டு என்னைக் கடந்து சென்றார். பின்தொடர்ந்து ஓடினேன்.
“இன்னிக்கு பஸ் அஞ்சு நிமிஷம் லேட்டுப்பா..என்னாச்சு?”
“நானாடா ஓட்டுறேன்? என்னைய கேக்குற.. போடா உள்ள” என்றார் அதட்டும் தொனியில்.
அதற்கு மேல் என்ன கேட்பது? அமைதியாக உள்ளே சென்று கட்டிலில் உட்கார்ந்துகொண்டேன்.
அம்மா அப்பாவிடமிருந்து பையை வாங்கிக்கொண்டார்,”நல்ல நேரம்.மழைக்கு முன்னாடியே வந்துட்டீங்க. கையக் கழுவிட்டு வாங்க சாப்புடலாம்” என்று தண்ணீர் செம்பை நீட்டினாள். மென்றுகொண்டிருந்த புகையிலையைத் துப்பிவிட்டு வாய் கொப்பளித்தார்.
நான் கட்டிலில் படுத்துகொண்டே வெளியில் நடப்பதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
“டேய்..இங்க வா” அப்பா கூப்பிட்டார்.
அந்தக் குரலைக் கேட்டதும் போதும், படுக்கையலிருந்து எகிறி குதித்து ஓடினேன்.
அப்பா மடியில் அந்தப் பையுடன் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார்.
பையைப் பிரித்தார். கண்கள் விரிய அதையே பார்த்தேன்.
பைக்குள் அவரது வாட்ச்மேன் யூனிஃபார்ம் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.அதை வெளியே எடுத்துப் போடவும் அந்தப் பையே காலியானது. எனது நம்பிக்கையும் தான்.
“இந்தா..சட்டைய மட்டும் தொவச்சுரு..பேன்ட் இன்னொரு தடவைக்குப் போட்டுக்கலாம்” என்று அம்மாவிடம் சொன்னார்.
“இந்தாடா..” என்று பைக்குள்ளிருந்து ஒர் எண்ணையில் ஊறியிருந்த ஒரு செய்தித்தாள் பொட்டலத்தை எடுத்து நீட்டினார். வாங்கிக் கொண்டேன்.
“பஜ்ஜி வேணும்னு கேட்டியே,,அதான்” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெரிய பாலிதீன் கவரை மடித்தார். என் ஆசைகளும் அதனோடே மடிந்தன. பட்டாசுமில்லை, புதுத்துணியுமில்லை.
கண்ணில் நீர் துளிர்த்துத் திரண்டது. பொட்டலத்தில் ஒரே ஒரு வாழைக்காய் பஜ்ஜி இருந்தது தேங்காய் சட்னியுடன். கண்ணீரை அப்பா பார்த்து விடக் கூடாது என்பதால் பஜ்ஜியை முகர்வது போல அந்த பொட்டலத்தை முகத்தருகே வைத்து மறைத்து கொண்டே,திரும்பி படுக்கை அரைக்கு வந்து கட்டிலில் சரிந்தேன்.
அந்த சில நொடிகள் அடக்கி வைத்திருந்த அழுகையும் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. கண்ணீர் பிரவாகம் எடுத்தது. சத்தம் வராமல் விம்மி விம்மி அழுதேன். ஜன்னல் வழியே அந்த பஜ்ஜியை தூக்கி எறிந்தேன்.
“டேய்,,வந்து சாப்புடு டா..சாப்புடுற நேரத்துல கண்டதையும் திங்காத. வா” என்றாள் அம்மா.
இந்த நிலையில் எங்கே எனக்கு பசிக்கப் போகிறது? அப்பாவின் திட்டுக்கு பயந்து சாப்பிட வேண்டியதாய் இருக்கிறது.
“ம்ம்..வரேன்” என்று சொல்லக் குரலெடுத்த போது, என்னையும் மீறி விம்மி விட்டேன்.
“என்னடா?” என்றாள் அம்மா.
வாயைப் பொத்திக் கொண்டுவிட்டேன்.
“ஒன்னும் இல்லமா..விக்கல்” என்று சொல்லிவிட்டு, மேலும் இரண்டு போலி விக்கல்களை வரவழைத்தேன்.
“வந்து தண்ணியக் குடி” என்றாள்.
கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, கண்களத் துடைத்துக்கொண்டு வெளியே சென்றேன். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நானும் உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினேன். கண்ணீர்த் தடம் தெரிந்து விடக் கூடாதென,முகம் தெரியாதவாறு ,நன்றாகக் குனிந்து குனிந்து சாப்பிட்டேன்.
“திருட்டுப் பசங்க.லட்ச லட்சமா சம்பாரிக்குறானுக. ஆனா வேல செய்யுற ஆளுகளுக்கு ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் குடுக்க காசில்லையாமா. எல்லாம் அந்த சாமிக்கே பொறுக்காது” எனறார் அப்பா.
“சரி விடுங்க. என்ன பண்றது? சம்பளத்தையாவது சரியான நேரத்துக்குக் குடுக்குறானுங்களே. இல்லைன நம்ம பொழப்பு அவ்ளோ தான்” என்று அம்மா வருந்திக் கொண்டாள்.
அதற்குபின் யாரும் எதுவும் பேசவில்லை.
அப்போது தூரத்தில் யாரோ எங்கேயோ ஒரு வெடியை வெடித்தார்கள் போல. சத்தம் காதைப் பிளந்தது.
“அட்த்தூ...அறிவுகெட்ட மூதேவிக.. இந்நேரத்துக்குத்தா வெடிக்கனுமா? மனுச நிம்மதியா ஒரு நிமிஷம் இருக்க முடியுதா? ஒரு நூறு ரூவா காசு சம்பாரிக்க உசுரு போய் உசுரு வருது. ஆனா இவனுங்க நூறு நூறா வெடி வாங்கிக் கரியாக்குறானுக” என்று அப்பா பொங்கினார்.
அந்த வார்த்தையிலேயே உறுதியாகி விட்டது நாளைக்குப் பட்டாசும் கிடையாதென்று.
வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு,நேராக ஓடிப் போய் கட்டிலில் விழுந்தேன். ஒரு போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினேன். என் வேதனை முழுவதும் கரைந்து கண்ணீராய்ப் பெருகியது. யார் யாரையோ திட்டினேன். பணக்கார வீட்டில் பிறந்ததற்காக சங்கரன், ஏழை வீட்டில் என்னைப் பிறக்க வைத்ததற்காக பிள்ளையார் சாமி என எல்லோரையும் திட்டினேன்.அந்த வரிசையில் அப்பா மனதில் தோன்றினார்.
‘அய்யோ..அப்படி நினைப்பது தப்பு. அப்பா இல்ல. நல்லவரு. எல்லாம் அந்த சாமி தான்”என சொல்லிக்கொண்டேமனதிற்குள் திட்டி அழும் படலத்தைத் தொடர்ந்தேன்.
அப்போது வெளியே படிக்கட்டில் உட்கார்ந்து அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.
“இன்னிக்கு சாயங்காலம் பூரா அந்த சங்கரு பையன் புதுத் துணி வாங்கிருக்கான்,பட்டாசு வாங்கிருக்கான்னு எங்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தான். பாவம். நீங்க வரும் போது ஏதாச்சும் வாங்கிட்டு வருவிங்கனு பாத்துட்டே இருந்தான் போல”
‘இந்தத் தீபாவளி,பொங்களெல்லாம் காசிருந்தாத்தான். நமக்கு திங்க மூனு வேளை நல்ல சோறு கிடைச்சாலே அன்னைக்கு தீபாவளி தான். இவன் வயசுல நானெல்லாம் ஓரு வேளை சோறு தின்னுட்டு ஒரு நாள் பூரா மாடு மேச்சுக்கிட்டுத் திரிஞ்சேன். ஏதோ இப்போ அந்தக் கொடுமையில்லனு சந்தோசப் படு.நானும் என்ன வச்சுகிட்டா இல்லேங்குறேன். இருந்தா எதுனாலும் செய்யலாம் புடிக்கலாம். இல்லாட்டி இருக்குறத வச்சு நிம்மதியா இருக்கப் பழகிக்கனும். நானும் ஒரு ஐனூறு ரூவாய் நாலஞ்சு பேருகிட்ட கேட்டுப் பாத்தேன். எங்கயும் கெடைக்கல. எல்லாம் தலையெழுத்து” என்றார் அப்பா.
“நமக்கு புரியுது. ஆனா அவ வயசுப் பசங்களோட சுத்தும் போது,அவனுக்கும் ஆசையாத் தான இருக்கும். ஒரு முன்னூறு ரூவா இருந்திருந்தாக் கூட ஒரு ரெடிமேடு துணி எடுத்திருக்கலாம்" இது அம்மா.
“இப்பத் தான குமாரு கல்யாணத்துக்கு எடுத்தோம். ரெண்டு மாசந்தான ஆச்சு. அதையே போட்டுவுடு. புதுசாத்தா இருக்கும்.. இந்த தங்கராசு வந்தானா? நாலு நாளாத் தேடிக்கிட்டு இருகேன்.கண்ணுலயே சிக்க மாட்டேங்குறான்” என்று பேச்சை மாற்றிவிட்டார் அப்பா. அம்மாவும் அதற்கு மேல் ஏதும் முயற்சிக்கவில்லை. அன்றைக்கு அப்பாவை விட அம்மாவைப் பிடித்தது.
பின் அவர்களின் பேச்சை கவனிப்பதில் எந்தப் பலனுமில்லை என்றானதும், திரும்பி சுவரை பார்த்துப் படுத்துக் கொண்டே யோசிக்கத் துவங்கினேன். இப்போது பிரச்சினை துணியும், பட்டாசும் இல்லை என்பதல்ல. ஏமாற்றமும் ஏக்கமும் பழகிப்போனவைகள் தான். ஆனால் நாளைக்கு இந்த சங்கரனிடம் என்ன சொல்லி சமாளிப்பது? காலையில் எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவானே. புதுசு போடலயா? பட்டாசு எங்கே? என பல கேள்விகள் கேட்பானே. வாங்கக் காசில்லை என்று சொல்ல அவமானமாக இருக்குமே. என்ன சொல்வது? என்ன சொல்வது? என்ன சொல்வது?
அந்தக் கேள்வியை எத்தனை முறை என்னை நானே கேட்டுக் கொண்டேனோ தெரியவில்லை. அப்படியே தூங்கிப்போனேன்.
“தடார்” என்ற காதைப் பிளக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தேன்.
வானம் லேசாக வெளுத்திருந்தது. வந்துவிட்டது அந்த தீபாவளி.
‘சங்கரன் வெடிச்ச வெடியா இருக்குமோ? இவ்வளவு சத்தமா வெடிக்குதே..அய்யயோ.. இப்போ அவன் வருவானே? என்ன சொல்லப் போறேன்?” கவலை மனதைப்பற்றிக் கொள்ள, மெதுவாய் படுக்கையை விட்டு எழுந்தேன்.
ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தேன். வெட்டவெளியான பரந்த பசுமையான நிலப்பரப்பு. கண்ணுக்கெட்டும் தூரம் வரை எங்கும் வீடில்லை. அவ்வப்போது மின்னல் வெட்டிக்கொண்டிருந்தது.
அம்மா வாசல் பெருக்கும் சத்தம் ‘சரக் சரக்’ என கேட்டுக்கொண்டிருந்தது. பக்கத்தில் படுத்திருந்த அப்பாவைக் கடந்து வெளியே சென்றேன்.
‘என்னடா அஞ்சரைக்கே எந்திருச்சிட்ட?”
“தூக்கம் தெளிஞ்சிருச்சுமா“ சொல்லிவிட்டு சங்கரன் வீட்டைப் பார்த்தேன். இருண்டிருந்தது. யாரும் இன்னும் எழவில்லை. எழாமலேயே இருந்தால் பரவாயில்லையெனத் தோன்றியது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மூன்று பேரும் குளித்து முடித்து சாமி கும்பிட்டு விட்டோம்.
அப்பா என் நெற்றி நிறைய ஒரு பட்டை போட்டு விட்டார்.
அம்மா பரணில் வைத்திருந்த பெட்டியை இறக்கி அதிலிருந்து என் புதுத்துணியை எடுத்தாள். அதாவது அப்பா சொன்ன அந்த குமார் கல்யாணத்திற்காக எடுத்தது. இதுவரை இரண்டு தடவை போட்டிருக்கிறேன்.அந்த இரண்டு தடவையும் சங்கரன் என்னைப் பார்க்கவில்லை என்பது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. புதுசு என்று சொன்னால் நம்ப வாய்ப்பிருக்கிறது.
கண்ணாடி முன்னால் நிறுத்தி அம்மா தலைவாரிவிட்டவாறே சொன்னாள்,”நீ செவப்பா இருக்குறதுக்கு,இந்த வெள்ள சட்டை,ப்ளூ டவுசர் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு. புதுசு மாறாம இருக்குடா”
நான் காலையிலிருந்து சரியாகப் பேசாமல் , முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பதைப் புரிந்து கொண்ட அம்மா,என் சோகத்தைக் குறைக்க எடுத்த முயற்சி அது. ஆனால் பலிக்கவில்லை. தொடர்ந்து மௌனமாகவே இருந்தேன்.
பொதுவாக பண்டிகை நாளென்றால் காலையில் இட்லி,தோசை தான் ஸ்பெஷல். அன்றைக்கும் அதுதான்.
ரெண்டு இட்லி எனக்குப் பிடித்த தேங்காய்ச் சட்னியுடன் வைக்கப் பட்டது. என்னைத் தாஜா செய்வதற்காகவே அம்மா அறைத்திருக்கிறாள்.
‘இந்த ரெண்டு இட்லி சாப்புடு. ஒரு தோசை சுட்டுத் தர்றேன்” அம்மா தோசைக்கல்லைக் கரித்துணியால் துடைத்துக்கொண்டே சொன்னாள்.
“வேண்டாமா”
“ஏன்டா? உனக்குத்தா தோசை புடிக்குமே”
‘பசிக்கலமா”. எனக்கு பேசவே பிடிக்கவில்லை. நான் வருத்தப் படுவதை அவர்களுக்கு வெளிப்படையாகக் காட்டி ஒரு பரிதாபத்தைப் பெறுவதில் ஒரு அற்ப ஆறுதல்.
சீக்கிரம் சாப்பிட்டு எழுந்த அப்பா வெளியில் எங்கோ சென்று விட்டார். நான் இரண்டாவது இட்லியில் கொஞ்சத்தை சாப்பிடாமல் வைத்து கையைக் கழுவினேன். என் அஹிம்சைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அது.
“டேய்..வச்சதே ரெண்டு இட்லி..அதுலயும் மிச்சம் வெச்சிருக்க”
“போதும்மா” சொல்லிவிட்டு வாசற்படியில் போய் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து கொண்டேன்.
அம்மா பின்னால் வந்து தலையில் கைவைத்தாள்.
“இந்தா..இருவது ரூவா இருக்கு. கடைக்கு போய் எதாது வேணும்னாலும் வாங்கிக்கோடா” என்றாள் வாஞ்சையாக.
பட்டாசு என்ற வார்த்தைக் சொன்னாலே அழுகை வந்துவிடும் என்பது தெரிந்து தான் ‘எதாது’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாள்.
அதை வேண்டாமென சொல்ல மனசில்லை.
ஆனாலும் மேலும் கொஞ்சம் பரிதாபத்தை உருவாக்க அதில் ஒரு பத்து ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டேன்.
“பத்து ரூவா இங்க் பேனா வாங்கிக்கிறேம்மா” என்று அதை மடித்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.
அம்மா ஏதோ சொல்ல முற்பட்டாள். ஆனால் சொல்லவில்லை.சமையலறைக்கு திரும்பிப் போய் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
சில நிமிடங்கள் கழிந்தன. தூரத்தில் ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அப்போது சங்கரன் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டது.
எங்கள் வீட்டின் மூன்றடி கருங்கல் மதிலின் மேல் சாய்ந்துகொண்டு, அவர்கள் வீட்டை வேடிக்கை பார்த்தேன்.
சங்கரனும்,அவன் அப்பாவும் உடல் முழுக்க எண்ணெய் பூசிக்கொண்டிருந்தனர். எங்கள் வீட்டில் அம்மா எண்ணெய் விலை அதிகமாகிவிட்டதென சமையலுக்கே எண்ணெய் கொஞ்சமாக ஊற்றுவதை எண்ணிக்கொண்டேன்.
சங்கரனை அவனது அம்மா தூக்கி துணிதுவைக்கிற கல் மீது நிற்க வைத்து குளிப்பாட்டத் துவங்கினார். சின்ன வயதிலிருந்தே தலைக்கு குளிப்பாட்டும் போது அழுவது எங்களுக்கு வழக்கம். அதற்கு காரணமெல்லாம் தெரியாது. சங்கரனும் “கண் எரியுதுமா. விடுமா” எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினான்.
இன்னும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் தான். புது சட்டையை மாட்டிக்கொண்டு பட்டாசுப் பையோடு வந்துவிடுவான். என்ன செய்யப்போகிறேன்? என்ன ஆனாலும் சரி அவன் முன்னால் அழுதுவிடக் கூடாது என உறுதி கொண்டேன்.
தூரத்தில் பிள்ளையார் கோவிலில் பூஜை நடந்துகொண்டிருந்தது. மணி ஓசை கேட்டது. எனக்குப் பிள்ளையார் மேல் கோபம் பொத்துக்கொண்டது. ’எனக்கு மட்டும் ஒன்னுமே கெடைக்குறதில்ல. தினமும் தான் சாமி கும்புடுறேன். அவனுக்கு மட்டும் எப்போமே புது ட்ரெஸ்,பட்டாசெல்லாம் கெடைக்குது. அவங்கப்பாவுக்கும் காசு நெறையா குடுக்குற. எங்கப்பா அம்மா நானெல்லாம் பாவம். எதுமே வாங்குனதில்ல” நினைக்கும் போதே என் கண்ணில் நீர் பொங்கி வழிந்துவிட்டது. மூக்கும் சேர்ந்து ஒழுகிக்கொண்டது. அதை உரிஞ்சியபடியே விசும்பி அழத்துவங்கினேன்.
“கார்த்தி இங்க வா” அம்மா அழைத்துக்கொண்டே வெளியே வரும் ஓசை கேட்டது.
அவசர அவசரமாக கண்களைத் துடைத்தேன். ஒரு துளி கண்ணீர் என் மணிக்கட்டின் மேல் விழுந்தது. அதை துடைக்கும் முன்னே ,அதனருகில் இன்னொரு பெரிய துளி விழ, மேலே பார்த்தேன். கார் மேகங்கள் திரண்டு நின்றிருந்தன. பளீர் பளீரென மின்னல் வெட்ட, டமாரென ஒரு பெரிய இடிச் சத்தம். சடசடவென ஒரு நொடியில் மழை கொட்ட ஆரம்பித்தது. சங்கரன் குடும்பம் வீடுக்குள் ஓடுவதைப்பார்த்தபடியே நானும் வீட்டுக்குள் ஓடினேன். அப்போது முகத்தில் விழுந்த சில மழைத்துளிகள் என் கண்ணீரைக் கச்சிதமாய் மறைத்துவிட்டன.
எனது எட்டு வருட வாழ்க்கையில் அப்படி ஒரு மழையைப் பார்த்ததேயில்லை. அடேங்கப்பா!! அது மழையே இல்லை. வானத்திற்கு மேலே ஒரு கடல் இருக்கிறதென்று சங்கரன் சொல்லுவானே அந்தக் கடலே கீழே வந்து ஊற்றுவது போல இருந்தது. பயமுறுத்தும் இடியும் மின்னலும் வேறு சேர்ந்துகொண்டன. அந்த காலைப் பொழுதில் வானம் மாலை போல இருட்டிக் கொண்டது. எஃப்.எம்மில் வங்கக் கடலில் புயல் சின்னம் தோன்றியிருப்பதால் இன்னும் நாற்பத்தெட்டு மணிநேரம் கனமழை பெய்யும் என அறிவித்துக்கொண்டிருந்தார் ஒருவர்.
“அம்மா..நாப்பத்தியெட்டு மணி நேரம்னா எவ்ளோ நாளு?”
“ரெண்டு நாளுக்கிட்ட வரும்டா’
“ஒ..அப்புடினா நாளானிக்கும் லீவா..ஜாலி” ஒரு சின்ன சந்தோசம் தோன்றி மறைந்தது.
அடுத்த ஒரு மணி நேரம் கழித்து அம்மா முறுக்கு சுட, அதை சாப்பிட்டபடியே மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். சுற்றுவட்டாரத்தில் ஒரு வெடிச்சத்தமும் கேட்கவில்லை. மனது குளிர்ந்தது.
ஒரு மணிக்கு அப்பா மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினார்.
“ஊரையே தூக்கிட்டுப் போற மாதிரி மழ கொட்டுது. அதுல தான் நீங்க ஊரு சுத்தப் போவிங்க. துணிய மாத்துங்க. சோறு ஆயிடுச்சு”
“மழ வரும்னு எனக்கென்ன தெரியும். சோத்தப் போடு” தலை துவட்டிக்கொண்டே சொன்னார் அப்பா.
அப்புறம் மதிய சாப்பாடு பருப்புக் குழம்பு,ரசம்,வெண்டைக்காய்,அப்பளம் என எனக்கு ஒரு பெரிய விருந்து போல இருந்தது. முகத்தை சோகமாக வைத்துக் கொண்டே கொஞ்சம் நிறைய சாப்பிட்டுக்கொண்டேன்.
நண்பகலைத் தாண்டியும் கனமழை ஓயவில்லை. ஓட்டு வீடு ஆங்காங்கே ஒழுகியது. கட்டில் போட்டிருந்த இடத்தில் கொஞ்சம் அதிகமாகவே ஒழுகியதால் அதை நகர்த்தி கதவருகே போட்டார் அப்பா. நான் படுத்துக்கொண்டேன். அம்மாவும் அப்பாவும் என் பக்கத்தில் உட்கார்ந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டே பழைய கதைகளை பேசிச் சிரித்துக் கொண்டனர். அப்பா சிரிப்பதைப் பார்க்கையில் ஆச்சர்யமாகவும்,ஏனோ கொஞ்சம் பாவமாகவும் இருந்தது.இப்படி மூன்று பேரும் நெருங்கி உட்கார்ந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. அந்த குளிர்மழை,அது எழுப்பிய மண்வாசனை,மூவரும் நெருங்கி இருப்பதால் அங்கே நிலவிய மெல்லிய வெப்பம் ஆகியவை மனதிற்கு இதமளித்தன. தாயின் மடியிலேயே ஒட்டித்திரியும் ஒரு கங்காருக் குட்டியைப் போல பாதுகாப்பாய் உணர்ந்தேன். அந்த சந்தோசத்திலேயே திளைத்து அப்படியே தூங்கிவிட்டேன்.
கண்விழித்த போது மணி மாலை ஆறு. தீபாவளி கிட்டத்தட்ட முடிந்து போயிருந்தது. முகத்தைக் கழுவிக்கொண்டு தெருவுக்கு வந்தேன். பாதம் மூழ்கும் அளவு தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த சங்கரன் எங்கே? பட்டாசெல்லாம் வெடித்து முடித்திருப்பானோ? மழை வராமல் போயிருந்தால் நிச்சயம் வந்து கூப்பிட்டிருப்பான். நல்ல வேளை மழை வந்து காப்பாற்றியது. இனி கவலை இல்லை. அவன் வர மாட்டான். நாளைக்குக் கேட்டால் பட்டாசு வெடித்ததாக சொல்லி நம்ப வைப்பதில் ஒன்றும் சிரமமிருக்காது.
கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டி கத்தியது. அதனருகில் சென்று அன்பாகத் தடவிக் கொடுத்து முத்தமிட்டேன். புல்லை அள்ளிப் போடவும் தின்னத் தொடங்கியது. மேலும் கொஞ்ச நேரம் அதைக் கொஞ்சி நேரத்தைப் போக்கினேன்.
மாலை நேர இருள் லேசாகப் பரவத்தொடங்கியது. சமையலறைக்குள் போய் இன்னும் இரண்டு முறுக்குகளை எடுத்துக் கொண்டு கட்டிலுக்குப் போய் படுத்துக்கொண்டே கொறித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது “கார்த்தி...சங்கரு வீட்டுக்கு போய் பாலக் குடுத்திட்டு வந்துரு” என்றாள் அம்மா.
என்னது? சங்கர் வீட்டுக்கா? அய்யயோ! பதற்றம் கவ்விக்கொண்டது. வழக்கமாக நான் தான் அவன் வீட்டுக்கு பால் கொண்டு செல்வேன். அப்படியே ஒரு ஒரு மணி நேரம் அவனோடு விளையாடிவிட்டு வருவேன். ஆனால் இன்றைக்கு?? போனால் அவன் தீபாவளியை பற்றித் தானே பேசுவான். போகக் கூடாது.
“என்னடா? சொன்னது காது கேக்கல?”
“அம்மா,,கால் வலிக்குதுமா..நான் போகலமா” என்றேன் கெஞ்சலாக.
“அடி வாங்காம போயிட்டு வந்துரு” காட்டமாக ஒரே பதில்.
கிளம்பிவிட்டேன் பால் கேனுடன்.
எங்களின் வீடுகளுக்கு இடையேயான அந்த இருநூறடி தூரத்தை மெதுவாகக் கடந்தேன். பல திட்டங்களையும்,பொய்களையும் தயார் செய்ததது மனது. அவற்றில் ஒன்றை இறுதி செய்வதற்குள் அவன் வீட்டை அடைந்து விட்டேன்.
வாசலிலிருந்து எட்டிப் பார்த்தேன். யாரையும் காணோம். அவனுக்குத் தெரியாமல் அவனது அம்மாவிடம் பாலைக் கொடுத்துவிட்டு ஓடிவிடலாமென முடிவெடுத்தேன். அப்போது உள்ளே இருந்து சங்கரனின் அழுகுரல் கேட்டது.
‘இவன் எதுக்கு அழுறான்? மழை பேஞ்சதால பட்டாசு வெடிக்க முடியாம போயிடுச்சுனு அழுறானோ?’ யோசித்துக்கொண்டே குரல் கேட்ட திசையில் நடந்தேன்.
அங்கே ஹாலில் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தான். பக்கத்தில் அவனது அம்மா.
என்னைப் பார்த்ததும்,"வா கார்த்தி,,எங்க இன்னும் பாலக் காணோம்னு பாத்தேன். இவனப் பாரு. நாலு மணிலேருந்து ஒரே அழுக” என்றார்.
“என்னடா ஆச்சு?” என்றேன்.
“பட்டாசப் பூரா பீரோ மேல கொண்டுபோய் வச்சிருக்கான். மழ பேய்ஞ்ச போது ஓட்டு வழியாத் தண்ணி எறங்கி பூராப் பட்டாசும் ஊறிப் போச்சு. இவன அங்க யாரு வெக்க சொன்னாங்க? நாளைக்கு வேற வாங்கிக்கலாம்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான். சரி பேசிட்டு இருங்க..போகும் போது பால் கேனக் கையோட வாங்கிட்டே போயிடு” என்று என் கையிலிருந்த பால் கேனை வாங்கிகொண்டு உள்ளே சென்றார்.
எனக்கு உண்மையில் அதை கேட்டதும் மனதிற்குள் சொல்ல இயலாத ஆனந்தம்.சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் பக்கத்தில் அமர்ந்தேன்.
“டேய் விடுடா...நாளைக்கு வெடிக்கலாம். இல்லேனா கார்த்த்திக தீபத்துக்கு வெடிக்கலாம். இன்னிக்கு இல்லேனா என்ன?” என்றேன்.
அவன் அழுகை நின்றபாடில்லை.
“அழுகாதடா..வேற வெளாட்டு ஏதாது ஆடலாம். பட்டாசு வருச வருசம் வெடிச்சிட்டுத் தான இருக்கோம்”
“போடா..நீயெல்லா நல்லா வெடிச்சிருப்ப,.நா மட்டும்" என அழுகையைத் தொடர்ந்தான்.
பக்கத்தில் நனைந்த பட்டாசுப் பெட்டி கிடந்தது.ராக்கெட் ஊறிப் போய் சுருண்டு கிடந்தது.
“டேய்.. உனக்கொன்னு தெரியுமா? நேத்து எங்கப்பா நூத்தம்பது ரூவாய்க்கு பட்டாசு வாங்கிட்டு வந்தாரு. நானும் இதே மாதிரி பரண் மேல வச்சிருந்தேன். இப்போ சாயங்காலம் பாத்தா பூராமே மழையில ஊறி வீணாப் போச்சு. எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சிட்டு நேரா உன்னப் பாக்க வந்தா, நீ இங்க அழுதுட்டு இருக்க” என்றேன்.
“நெஜமாவா?” என்றான் மலர்ச்சியாக.
“பின்ன? அவ்வளவு வெடியையும் தூக்கிப் போட்டுட்டுத் தான் வரேன். நமக்கு இன்னிக்கு நேரம் நல்லால டா.”
இதைக் கேட்டதும் இன்னும் கொஞ்சம் ஆறுதல் அடைந்தான். கண்களைத் துடைத்துக்கொண்டான். நம்பிவிட்டான். எனக்கும் உள்ளூர ஒரு மகிழ்ச்சி. ஒரு வாரமாய் உறுத்திய மனபாரம் நீங்கியது. உற்சாகமானேன். அவனும் ஓரிரு நிமிடங்களில் சகஜமானான்.
அவன் “சரி,,துப்பாக்கி இருக்கு. திருடன் போலிஸ் வெளையாடலாமா? ஆமா..உன்னோட துப்பாக்கி எங்க?” என்றான்.
“ம்ம்..அது...ஆ..அதான் நீ துப்பாக்கி வாங்கிட்டியே.ரெண்டு பேர் கிட்டயும் துப்பாக்கி இருந்தா ரெண்டு பேரும் போலிஸ் ஆயிருவோமே. அப்புறம் திருடனுக்கு என்ன பண்றது? அதான் துப்பாக்கி வேணாம்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன்.அடுத்த தீபாவளிக்கு நான் போலிஸ்,நீ திருடன். ஓ.கே?” என்றேன்.
“ம்ம்,,ஓ,கேடா.. இப்போ நான் தான் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் பாண்டியன்” என்று துப்பாக்கியை என் நெற்றியில் வைத்தான்.
“சார்,,என்ன சுடாதிங்க சார்” என்று இரண்டு கைகளயும் மேலே உயர்த்துவது போல தூக்கி,அவன் வயிற்றில் மெதுவாக குத்தினேன்.அவன் பறந்து போய் விழுந்தான். இப்படித்தான் எங்கள் திருடன் போலிஸ் விளையாட்டு தொடங்கும்.
“இப்போ என்னய புடிடா போலிஸ்காரா..ஹஹா” என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
“டேய் திருடா நில்லு” என்று கத்தியபடியே துரத்த ஆரம்பித்தான்.
வீட்டிலிருந்து வெட்டவெளிக்குத் தாவினோம்.
“டேய்,,ஓடாதிங்கடா..கார்த்தி,,இந்தாட பால் கேனு” அவன் அம்மாவின் கூச்சலை சட்டை செய்யாமல் ஓடினோம்.
“யேய்ய்ய்ய்ய்” எனக் கத்திக் கொண்டே தேங்கியிருந்த தண்ணீர் குட்டையைத் தாண்டினேன்.கால்கள் சக்கரமாய்ச் சுழன்றன. இனம்புரியாத சந்தோஷத்தில் மிதந்தபடியே ஓடினேன்.
அன்று பெய்த மழைக்கு நன்றி சொல்லியபடி ஓடினேன்.மனதைப் பீடித்திருந்த சோகமெல்லாம் பறந்து போக, ஆனந்தமாகக் குதித்துக் குதித்து ஓடினேன், பின்னால் சங்கரனின் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் என்னை நெருங்கியது
அடுத்த தீபாவளிக்கு எப்படியும் போலிஸ் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் இன்னும் வேகமாக ஓடினேன்.
“படார் படார்” என சரவெடி காதைப் பிளந்தது. என் வீட்டுப் போர்டிகோவில் நின்றுகொண்டிருந்த நான் அந்தப் பழைய நினைவுகளிலிருந்து மீண்டேன். முப்பது ஆண்டுகள் எவ்வளவு சீக்கிரம் கடந்து விட்டது என்று எண்ணும் போது வியப்பாக இருந்தது.இன்று நான் சென்னையில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக இருக்கிறேன்.
என் செல்ஃபோன் ஒலித்தது. “சங்கர் காலிங்” என்று காட்டியது. அந்த சங்கரன் இப்பொழுது சங்கர் ஆகியிருக்கிறான்.
“ஹாப்பி தீவாளி கார்த்தி” என்றான்.
“ஹய்,,,தேங்க்ஸ்டா சங்கர்..சேம் டூ யூ..ஹவ் ஆர் யூ? காலைலேயே உனக்கு கால் பண்ணியிருந்தேனே” எனத் தொடங்கி பத்து நிமிடம் பேசிவிட்டுத் திரும்பி வந்தேன்.
ஹாலில் என் பத்து வயது மகனும் ஆறு வயது மகளும் டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர்.
“இப்போ வரப்போறீங்களா? இல்ல நானே எல்லா ராக்கெட்டையும் நானே வெடிக்கவா?” என்று அவர்களை நோக்கி உரக்கக் கேட்டேன்.
“அடப் போங்க டாடி, டி.வில சூப்பரான படம் போட்ருக்காங்க. நாங்க வரல. க்ராக்கர்ஸ் எல்லாம் போர். வாங்க வேண்டானு சொன்னாக் கேக்காம வருஷ வருஷம் வாங்கிட்டு வந்து நீங்களே தான் வெடிக்கிறிங்க” என்று அலுத்துக் கொண்டான் மகன்.
“அடப் போங்கடா,,நீங்களும் உங்க டி.வியும்” என நினைத்துக்கொண்டு, வாசலுக்கு வந்து, ஒரு ராக்கெட்டை கொளுத்தினேன்.
‘ஸ்ஸ்ஸ்” என சீறிப்பாய்ந்து, உயர உயரப் பறந்து பூக்கோலமாய் வெடித்துச் சிதறியது.
அதைக் கண்டு பூரித்தேன். எனக்குள் இருக்கும் அந்த மூன்றாம் வகுப்பு கார்த்தி, இந்த ராக்கெட் மூலமாக ஒரு போலீசையும் தாண்டி ஒரு மிலிட்டரி ஆஃபிஸர் ஆன சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.
படிக்கத் துவங்கியது முதலே கதை என்றல்லாமல் ஏதோ வாழ்க்கையையே வாழ்ந்து விட்டு வந்ததாக ஒரு எண்ணம். ஒவ்வொரு வரியை படித்து முடிக்கும் முன்னும் அந்த வரியில் உள்ள உணர்வுப் பெருக்கம் நெஞ்சில் உருவாக்கிய பாரமும் அது ஏற்படுத்த எத்தனிக்கும் கண்ணீரும் கதையின் முடிவு வரை தொடர் உணர்ந்து கொண்டே இருந்தேன். கதை தொடக்கத்தில் அந்த வீடு, அப்பாவின் வருகை, தெரு, கார்த்தியின் அந்த மனம் போராட்டம், ஏக்கம், பிள்ளைத்தனமான கோபம், மனத்துடனான உரையாடல், தீபாவளி முன் இரவு உணர்வுகள், மழை பெய்து மனதில் நிம்மதியை வரவழைத்த தருணம் அதை தன் அழுகையை துடைக்க கடவுளும் இயற்கையும் அளித்த ஏற்பாடு என ஒவ்வொரு கட்டமும் உண்மையில் என்னை இத்தனை ஆண்டு காலம் நான் வாழ்ந்து வருவதை எழுத்துருவாய் காண்பதாக அமைந்தது பாரத்தை ஏற்படுத்தியதில் வியப்பேதும் இல்லை. பொருந்தி மட்டும் போகவில்லை வாழ்ந்த வாழ்க்கையையே சில நிமிடங்கள் பின்னோக்கி வாழச்செய்ததாக அமைந்தது. மிகமிக அருமை. உணர்வின் இருப்பிடமாக உள்ளது உங்கள் எழுத்து. தொடருங்கள் நண்பரே.💕✨
ReplyDeleteAnna.. Semaaaa creation na.. Nan idha yerkanave padichiruken nyaabagam iruku.. Aanaalum ipoyum andha chinna chinna details( story la vara andha paiyanoda disappointments enakum innum varudhu) But ipo idha padichaalum idhu ungaloda first story nu enaala namba mudiyala.. Semaaaa.. Please keep posting all your stories and create more na
ReplyDelete